தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. மார்ச் 30 முதல் ஏப். 6 வரை நடந்த மனுத் தாக்கல் காலத்தில் மொத்தம் 7,599 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
வரும் ஏப். 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு பரிசீலனை தொடங்கி, மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டன; வேட்பாளர்களுடன் கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் மனுவும் அனுமதி பெற்றது.
மேலும், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜயின் மனுக்கள், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இரவு 9.30 மணி நிலவரப்படி 4,472 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதுவரை 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்றும், மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் புதன்கிழமை வரை இருப்பதாகவும் கூறப்பட்டது.




