வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதலை இருவாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு ஈரானும் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததால், பிராந்தியத்தில் உடனடி பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து சுமுகமாக நடந்தால் இருவாரங்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் முன்வைத்த 10 கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் தெரிவித்தது. ஈரான் மீது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தங்களின் ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.

மேலும், ஈரான் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும் தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், இருவாரங்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை சுமார் 18% சரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இடைக்கால போர் நிறுத்தம் அமைய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தையை ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.