டெஹ்ரானில் இருந்து வெளியான தகவலின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கெடு முடிவடைவதற்கு முன்பே, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாகக் கருதப்படும் கார்க் தீவில் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் பிப். 28 முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. போரை நிறுத்துவதற்காக டிரம்ப் விதித்த கெடுவை ஏற்க ஈரான் தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றிரவு 8 மணிக்குள் ஈரான் உடன்பாட்டிற்கு வர வேண்டும்; இல்லையெனில் பாலங்கள், மின் நிலையங்கள் போன்ற கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அந்த கெடு முடிவதற்குள்ளாகவே கார்க் தீவில் தாக்குதல் நடந்ததாக செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, காரஜ் பகுதியில் மின் விநியோக தடங்கள் மீது நடந்த தாக்குதலால் மின்விநியோகம் தடைபட்டதாக கூறப்படுகிறது. ஜாஜன் மாகாணத்தில் ஒரு ரயில்வே பாலம் மீதும் தாக்குதல் நடந்ததாகவும் தகவல் உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “இன்றிரவு ஒரு நாகரிகமே அழியப்போகிறது” என டிரம்ப் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானில் “முழுமையான ஆட்சி மாற்றம்” நிகழ்ந்திருப்பதாகவும், பயங்கரவாத ஆதரவு அற்ற சிந்தனைகள் மேலோங்கினால் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியதாக செய்தி குறிப்பிடுகிறது.