சென்னையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அறிவித்த ரூ.8,000 கூப்பன் திட்டம் அரசியல் எதிரணியை “அதிர்ச்சியடைய” வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத் தொகை, ‘விடியல் பயணம்’, காலை உணவு திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக அவர் கூறினார். மேலும், மூன்று மாத மகளிர் தொகையுடன் கோடை கால நிதியை இணைத்து ரூ.5,000 வழங்கியதும் ஆதரவு பெற்றதாக குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், “இத்தனை சீட்” என பேரம் பேசும் இடத்தில் தாம் இல்லை என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்றும் வைகோ தெரிவித்தார்.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை நினைவூட்டிய அவர், அந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுவதாக கூறினார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.




