தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தவெக தலைவர் நடிகர் விஜய் செவ்வாய்க்கிழமை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். 51 கடுமையான நிபந்தனைகளுடன் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், சுமார் 35 கி.மீ. சாலை பயணத்திற்கும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரசார வாகனத்தின் மேல்புறத்தில் நின்றபடி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களையும் தொண்டர்களையும் நோக்கி விஜய் கைகளை அசைத்து, வணக்கம் வைத்து உற்சாகப்படுத்தினார். அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து பலர் இருசக்கர வாகனங்களில் சென்றதாகவும், சிலர் ஹெல்மெட் அணியாமல் கோஷமிட்டபடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

தாழையூத்து பகுதியில் விஜயின் வாகனம் சென்றபோது, பின்னால் வந்த சில பைக்குகள் முன்னே சென்ற வாகனங்களுடன் மோதியதாக தகவல். தொடர்ந்து பைக்குகள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதியதால் பலர் சாலையில் சரிந்து விழுந்தனர்.

இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விஜய் புறப்படும் நேரத்தில் மேலும் இரண்டு விபத்துகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்றைய பிரசாரத்தில் மொத்தம் 4 விபத்துகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.