திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார். அப்போது, “உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என கூறிய அவர், தமிழக காங்கிரசை திமுக “சில பல கோடிகளை கொடுத்து” தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய், அரசு முழு அதிகாரத்துடன் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பார்கள் எனவும், ஸ்டாலின் “அதிகாரமில்லாத முதல்வராக” இருப்பதாகவும் கூறினார். திமுக அரசு தமக்கு எதிராக நெருக்கடிகள் மற்றும் அவதூறு பிரசாரங்களை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், திமுக கூட்டணியும் பாஜ கூட்டணியும் வெளியில் தனித்தனியாக இருப்பது போல இருந்தாலும், உள்ளுக்குள் ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்றன என அவர் குற்றம்சாட்டினார். மக்கள் நலனுக்காக தாம் அரசியலில் செயல்படுவதைத் தடுக்கவே அவர்கள் முயல்கிறார்கள் என்றும், தாம் வந்ததிலிருந்து ஊழல் செய்ய முடியாமல் “எல்லாவற்றிலும் மண் விழுந்தது” என்றும் கூறினார்.

சிறுபான்மை மக்களிடையே திமுகவின் “சாயம் வெளுத்து போய்விட்டது” என கூறிய விஜய், சிறுபான்மையினர் தம் பக்கம் நிற்கிறார்கள் எனவும் வலியுறுத்தினார். கரூர் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் தம்மீது பழி சுமத்த முயன்றதாகவும், திரைப்படத்திற்கு நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறி, இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.

இந்த தேர்தலை “அதிசய தேர்தல்” என குறிப்பிட்ட விஜய், 234 தொகுதிகளிலும் “விஜய் தான் வேட்பாளர்” என்ற வகையில் மக்கள் ஆதரவு ஒன்றிணைய வேண்டும் என பேசினார். போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, வன்முறை ஆகியவற்றுக்கு அரசு பதில் சொல்ல வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.