மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, 90.83 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை நடைமுறையில் இருப்பதால், விதிகளின்படி இனி புதிதாக பெயர் சேர்க்க முடியாது என்றும் கமிஷன் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது; முடிவுகள் மே 4ல் வெளியாகின்றன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் பிப். 28ல் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் மொத்த வாக்காளர்கள் 7.66 கோடியில் இருந்து 7.04 கோடியாக குறைந்ததாகவும், இது சுமார் 8.3% அளவிலான குறைவு எனவும் கூறப்பட்டது. மேலும் “தர்க்க ரீதியான முரண்பாடுகள்” காரணமாக 60.06 லட்சம் பேர் பெயர்கள் இறுதி பட்டியலில் சேர்க்காமல் நிறுத்தப்பட்டன.
பெயர் நீக்கம் மற்றும் முரண்பாடுகள் பட்டியல் தொடர்பாக வாக்காளர்கள் அளித்த ஆட்சேபனைகளை, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் கொல்கட்டா உயர் நீதிமன்றம் அமைத்த தீர்ப்பாய நீதிபதிகள் விசாரித்து முடிவு எடுத்தனர்; இதற்கான துணை பட்டியல்களும் வெளியிடப்பட்டன. அந்த வகையில், முரண்பாடுகள் பட்டியலில் இருந்த 60.06 லட்சத்தில் 27.16 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 32.68 லட்சம் பெயர்கள் மீண்டும் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டன.
மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர், மாவட்ட வாரியான தரவுகள் பொதுதளத்தில் வைக்கப்பட்டதால் பணிகள் வெளிப்படையாக நடந்ததாக கூறினார். முரண்பாடுகள் பட்டியலில் இருந்தவர்களில் 59.84 லட்சம் பேரின் விவரங்கள் ஏற்கனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், 22,163 வாக்காளர்களின் விவரங்கள் மின்னணு கையொப்பத்திற்காக காத்திருப்பில் உள்ளதால் பணிகள் முடிந்த பின் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்ததால் வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு விட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவு அல்லது தகுதி வாய்ந்த அதிகாரிகளின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்றும் கூறினார். இரண்டாம் கட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகும் நிலையில், பெயர் சேர்ப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு ஏப். 13ல் விசாரணைக்கு வருகிறது.




