தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, “தி.மு.க. தோல்வி கோவையில் தான் தொடங்கும்” என கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட தி.மு.க. அமைப்பை செந்தில் பாலாஜி “முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார். தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக வரும் குற்றச்சாட்டுகளை மறுத்த அண்ணாமலை, அரவக்குறிச்சியிலும் கோவையிலும் கேட்டுப் பார்த்தால் தான் பணம் கொடுக்கவில்லை என்பது தெரிய வரும் என்றார். மேலும், கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியின் கரூர் தொகுதியைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்களுக்கான ஆவணங்களில் ஒரே நோட்டரி கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.
கரூரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து கோவையில் வீதிவீதியாக சென்று ரூ.200, ரூ.500 மற்றும் அண்டா, வாட்ச் போன்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தவறாக சேர்த்த பணத்தை ஓட்டுக்காக வாரி இறைக்கிறார்கள் என்றும் கூறினார்.
மேலும், ‘இந்தி’ கூட்டணியில் ஒற்றுமை இல்லை என கூறிய அண்ணாமலை, புதுச்சேரி பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தி.மு.க. அல்லது முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், ஸ்டாலினும் ராகுல் பெயரை சொல்லவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.




