வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை தற்போது பெல்ஜியம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தரப்பு முன்வைத்த ஏழு குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த நீதிமன்றம், அதில் ஆறு குற்றச்சாட்டுகள் பெல்ஜியம் சட்டப்படி தண்டனைக்குரியவை என தெரிவித்தது. சதித் திட்டம், நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், கணக்குகளில் முறைகேடு, அரசு அதிகாரிகள் உடந்தையுடன் முறைகேடாக ஆதாயம் பெறுதல் மற்றும் முறைகேடான நடத்தை ஆகியவை இதில் அடங்கும்.
ஆனால், “ஆதாரங்களை அழித்தல்” என்ற குற்றச்சாட்டு மட்டும் பெல்ஜியம் சட்டப்படி நாடு கடத்தத்தக்க குற்றமாக கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்ததாக, நிரவ் மோடியுடன் சேர்ந்து சோக்சி மீது குற்றச்சாட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பெல்ஜியம் உயர் நீதிமன்றம் நாடு கடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதற்கிடையில், நாடு கடத்தல் நடைமுறையில் குறை இல்லை என பெல்ஜியம் உச்ச நீதிமன்றமும் வழக்கு தொடர பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 2021-ல் ஆன்டிகுவாவில் இருந்து தன்னை கடத்திச் சென்றதாக சோக்சி முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என சுட்டிக்காட்டியது. நாடு கடத்தப்பட்டால் இந்தியாவில் சித்ரவதை அல்லது நீதி மறுப்பு ஏற்படும் என்ற அவரது பாதுகாப்பு வாதங்களையும் நிராகரித்த நீதிமன்றம், இறுதி முடிவை பெல்ஜியம் அரசு விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




