தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. சென்னைில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிக்கையை வெளியிட்டார்.
“தமிழகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் 10 பிரிவுகளாக 36 பக்கங்களில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, அரசு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களில், ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,000 பென்சன் கிடைக்க நடவடிக்கை, பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில், 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும் என்றும், அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கற்றல் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களிலும் மனநல மருத்துவமனைகள் அமைத்தல், மனநல முதலுதவிக்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி, ஆரம்ப சுகாதார மைய வலையமைப்பை பலப்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் புதுப்பிக்கப்பட்ட தரமான அரிசி வழங்குதல், முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை, குறைந்த விலையில் வீடுகள் மற்றும் விரைவான நிலப்பட்டா வழங்குதல், பாசனக் கால்வாய்களை மீட்டெடுத்து நவீனமயமாக்குதல், விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்தலுக்கான வாரியம் அமைத்தல், தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்றுதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்குதல் மற்றும் 2030க்குள் நாய்களுக்கு 100% தடுப்பூசி இலக்கு ஆகியவற்றையும் அறிக்கை குறிப்பிடுகிறது. மாநிலத்தில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.




