அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸை ஜாமினில் விடுவிக்கக் கோரிய புதிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

2010ஆம் ஆண்டு, அப்போது மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யு.பி.ஏ.) ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பயணிக்க 12 ஹெலிகாப்டர்களை ரூ.3,600 கோடி மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013ல், இந்த ஒப்பந்தத்தில் ரூ.423 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தன.

2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) அரசு அமைந்த பின்னர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், இந்த முறைகேடுகளில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறி ஜேம்ஸ் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, துபாயில் இருந்த ஜேம்ஸ் 2018 டிசம்பரில் நாடு கடத்தப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த இரு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்தாலும், நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்யாததும், ரூ.15 லட்சம் பிணைத் தொகையை செலுத்தாததும் காரணமாக அவர் சிறையிலேயே தொடர்ந்தார்.

இதையடுத்து மீண்டும் ஜாமினில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தர் துடேஜா அமர்வு விசாரித்து, ஜேம்ஸ் தரப்பின் வாதங்களை ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.