தமிழக முதல்வரின் செயலர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.உமாநாத்தை தேர்தல் கமிஷன் உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவின் விசாரணையில், அதன் தகுதி குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பா.ஜ. வழக்கறிஞர் மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், உமாநாத் விதிகளை மீறும் வகையில் செயல்படுவதாகவும், அவர் தொடர்ந்தால் தேர்தல் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும் பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், முதல்வரின் தனிச்செயலராக உமாநாத் மட்டும் தொடர அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் வலியுறுத்தினார். அவரது நிர்வாக நடவடிக்கைகள், காவல் துறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு, பிறப்பித்த உத்தரவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவும், அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை பரிசோதிக்கவும், புகார்களை பரிசீலித்து தேர்தல் கமிஷன் உத்தரவு வழங்கவும் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படாத நிலையில், மனுவை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், புகார்களில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், உமாநாத்தை எதிர்மனுதாரராக சேர்க்காததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, உமாநாத்தை எதிர்மனுதாரராக சேர்க்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்று, நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.