டெஹ்ரான்: உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் ரூ.18.5 கோடி வரை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தக் கட்டண வசூலுக்கு வழிவகுக்கும் முக்கிய மசோதாவுக்கு ஈரான் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசோதா படி, கப்பல்களின் வகை, எடை உள்ளிட்ட பல நிலைமைகளை கருத்தில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். ஜலசந்தியை கடக்கும் ஒவ்வொரு கப்பலிடமும் அதிகபட்சமாக ரூ.18.5 கோடி வரை வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வசூலிக்கப்படும் தொகையை ஓமனுடன் பகிர்ந்து கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க இந்த வருவாய் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தினசரி 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் நிலையில், புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஜலசந்தியை நம்பியுள்ளதால், உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் பாதிக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




