கேரளம், புதுச்சேரி மற்றும் அசாமில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 9 காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி கேரளத்தில் 62.71%, புதுச்சேரியில் 72.40% மற்றும் அசாமில் 75.91% ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆளும் கூட்டணி, தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் சீமானின் நா.த.க. ஆகியோரிடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கேரளத்தில் 140 தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு சுமார் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அசாமில் 126 தொகுதிகள் உள்ளன; மொத்தம் சுமார் 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் 318 பேர் மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பதற்றமான சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூன்று பகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




