காங்கிரஸ் தேசிய தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரள தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து குஜராத் மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது, குஜராத் உள்ளிட்ட இடங்களில் “படிப்பறிவு இல்லாதவர்களை ஏமாற்ற முடியும்; ஆனால் கேரள மக்களை ஏமாற்ற முடியாது; அவர்கள் படிப்பறிவு உள்ளவர்கள், புத்திசாலிகள்” என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பல பா.ஜ.க. தலைவர்கள், குஜராத் மக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி கண்டனம் தெரிவித்தனர். விவகாரம் தீவிரமடைந்த நிலையில் கார்கே சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார்.

அந்த பதிவில், கேரள பிரசாரத்தில் தாம் பேசிய சில கருத்துகள் திட்டமிட்டு தவறாக திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இருந்தாலும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். குஜராத் மக்களிடம் எப்போதும் அளவுகடந்த அன்பும் மரியாதையும் உள்ளதாகவும், அவர்களை புண்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.