மணிப்பூர் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட பதற்றம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மொய்ரங் டிரோங்லோபி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தாய் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். மேலும், சி.ஆர்.பி.எப். முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுமார் 400 பேர் கொண்ட கூட்டத்தின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இரு ஆயில் டேங்கர்களை தீவைத்து கொளுத்துதல், தற்காலிக போலீஸ் முகாம்களை சூறையாடுதல், போக்குவரத்தை தடை செய்தல் போன்ற சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், தவ்பால், காக்சிங் மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவையும் முடக்கப்பட்டது. இதனால் புதன்கிழமை புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை; பதற்றம் நீடித்தாலும் அமைதி திரும்பியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்ய முதல்வர் என். பீரன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தாக்குதலை கண்டித்த அவர், வெடிகுண்டு வீச்சு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)க்கு ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.




