சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம.) போட்டியிடமாட்டோம் என அறிவித்ததைத் தொடர்ந்து, விருப்ப மனு கட்டணம் திருப்பி பெறாமல் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் முடிவை சிலர் எடுத்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என கட்சி தலைமை முன்பே அறிவித்திருந்தது. அதன்படி, எம்.எல்.ஏ. சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட மொத்தம் 60 பேர் விருப்ப மனு அளித்தனர்.
பின்னர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. வலியுறுத்தியதாக கூறி, கட்சியின் தனித்துவத்தை காக்க கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கமல் ஹாசன் அறிவித்தார். இதனால் விருப்ப மனு அளித்தவர்களில் சிலர் தாங்கள் செலுத்திய தொகையை திருப்பி வழங்குமாறு கேட்டனர்.
இதையடுத்து, கமல் உத்தரவின்படி தலைமையக நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம், ஏப்.8 முதல் ஏப்.16 வரை வந்து தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 25 பேர் தலா ரூ.50,000 என மொத்தம் ரூ.12.50 லட்சத்தை திருப்பி தர வேண்டாம்; கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமலுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
மீதமுள்ள 35 பேரில் எத்தனை பேர் பணத்தை திரும்ப வாங்குகின்றனர் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.




