மேற்குவங்கத்தில் “பெரிய மாற்றம்” நிகழப்போகிறது என்றும், மக்கள் எழுச்சியைப் பார்க்கும் போது மாநிலத்தில் பாஜ ஆட்சி மலரும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திரிணமுல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சியை மாற்ற மக்கள் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்குவங்க மாநிலம் ஹால்தியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி அரசு மாநில வளர்ச்சியைத் தடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; மாநிலத்தின் பெருமையை மீட்டெடுத்து, வளர்ச்சியடைந்த மேற்குவங்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் தேர்தல் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊடுருவல் அதிகரித்துள்ளதாக கூறிய மோடி, அதே நேரத்தில் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக வெளியே குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் ஹால்தியாவிற்கு நாடு முழுவதிலுமிருந்து வேலைக்காக மக்கள் வருவார்கள்; இப்போது இங்குள்ள இளைஞர்கள் அந்தமான், ஒடிசா உள்ளிட்ட இடங்களுக்கு வேலை தேடி செல்லுகின்றனர் என அவர் கூறினார்.
இந்த உரையில், மேற்குவங்கத்திற்கு பாஜ அளிக்கும் ஆறு வாக்குறுதிகளையும் மோடி பட்டியலிட்டார். அதில் நம்பிக்கையை மீட்டெடுப்பது, ஆளுகையில் பொறுப்புடைமையை உறுதி செய்வது, பெண்களுக்கு எதிரான ஊழல் மற்றும் அநீதி தொடர்பான வழக்குகளை விசாரிப்பது, டிஎம்சி ஆட்சிக்கால ஊழலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி சிறையில் அடைப்பது, அகதிகளுக்கு அரசியலமைப்பின் கீழ் உரிமைகள் வழங்கி சட்டவிரோத குடியேறிகளை அனுமதிக்காதது, மேலும் 7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் வழங்குவது ஆகியவை இடம்பெற்றன.




