புதுடில்லி: சி.பி.எஸ்.இ. அமைப்பின் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு புதிய பாடம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத் தயாரிப்பு குழுவை மறுசீரமைத்துள்ளது.
‘நீதித்துறை ஊழல்கள்’ என்ற தலைப்பில் சேர்க்கப்பட்ட பாடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பாடம் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சேர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை தயாரித்த பேராசிரியர்களை இனி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகத் தயாரிப்பில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், மத்திய–மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, 3ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் அதிகாரம் கொண்ட 20 பேர் அடங்கிய பாடத்திட்டம் மற்றும் கற்றல் பொருள் குழு (என்.எஸ்.டி.சி.) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பேராசிரியர்கள் மைக்கேல் டானினோ, சீனிவாசன் மற்றும் மறைந்த பிபெக் டெப்ராய் ஆகியோர் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாடத்திட்டத்தை வலுப்படுத்தவும் மீண்டும் தவறுகள் நிகழாமல் தடுப்பதற்கும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ரகுவேந்திர தன்வார், தேசிய சட்டப் பள்ளியின் முன்னாள் துணைவேந்தர் வெங்கட ராவ், என்.சி.இ.ஆர்.டி. இணை இயக்குநர் அமரேந்திர பிரசாத் பெஹரா ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும், உள்ள பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.




