பா.ம.க. ‘மாம்பழம்’ தேர்தல் சின்னத்தை, கட்சிக்குள் நிலவும் சிவில் தகராறு முடிவுக்கு வரும் வரை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.
இதற்கு முன், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாட்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சின்னத்தை முடக்கக் கோரிய இடைக்கால மனுக்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
ஆனால், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன எனக் கூறி உரிமையியல் நீதிமன்றம் அந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மனு குறிப்பிடப்பட்டது. அவசர விசாரணை கோரிக்கையை நீதிபதிகள் ஏற்காமல், மனு முறையாக பட்டியலிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தனர்.



