சென்னை தலைமை செயலகம் முன் திமுக கொடியை தீயிட்டு எரித்ததாக போலீஸ் ஏட்டு ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்டவர் கோதண்டபாணி. அவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். மகளுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கு தவறான சிகிச்சை காரணம் எனக் கூறி, அவர் சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளின் கால்வலி பிரச்னைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிப்பு அதிகரித்து, மகளின் கால் பாதம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், இன்று காலை சுமார் 9 மணிக்கு கோதண்டபாணி மகளுடன் சீருடையில் தலைமை செயலகத்துக்கு வந்துள்ளார். காவலில் இருந்த போலீசார் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் திமுக கொடியை தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக கோதண்டபாணி கைது செய்யப்பட்டார்; தன்னை தடுக்க முயன்ற போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.




