புதுச்சேரியில் ஓட்டு போட வந்த வாக்காளர்களை ரோஜா பூக்களுடன் வரவேற்று, வரிசையில் அமைதியாக செல்லுமாறு அன்புடன் அறிவுறுத்திய ‘நிலா’ என்ற ரோபோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வஉசி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாவணி அணிவிக்கப்பட்ட நிலையில், கையில் ரோஜா பூக்கள் நிரம்பிய தட்டுடன் ரோபோ ‘நிலா’ வாக்காளர்களை வரவேற்றது.
இணையத்தில் வைரலான வீடியோவில், ‘வணக்கம், வாக்குச்சாவடிக்கு வரவேற்கிறோம். தயவு செய்து அமைதியாக வரிசையில் செல்லுங்கள். தயவு செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டையை தயாராக வைத்து இருங்கள்’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இனிமையான குரலில் அது பேசுவது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ரோபோடிக் வடிவமைப்பாளர் கவுசிக், வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு உதவியாக இந்த ரோபோ செயல்படும் என்றும், தங்களின் சொந்த மென்பொருள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும் என்றும், தேவைக்கேற்ப எந்த மொழியிலும் பேசச் செய்து உதவி வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.




