கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பைத் தொடர்ந்து, அதனை எதிர்த்த சீராய்வு மனுக்கள் தொடர்பான விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
பாலின சமத்துவம் தொடர்பான கேள்விகள் பல மதங்களிலும் எழுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மற்றொரு அமர்வு இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியிருந்தது. இதையடுத்து, சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மத நடைமுறைகளில் எது ‘மூடநம்பிக்கை’ என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கத் தகுதியில்லை என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் 25(2) பிரிவின் கீழ், மூடநம்பிக்கைகளைத் தடுக்கும் சீர்திருத்தச் சட்டங்களை கொண்டு வருவது சட்டமன்றங்களின் கடமை என்றும், பன்முக சமூகத்தில் எது மூடநம்பிக்கை என்பதை வரையறுப்பது சட்டமன்றங்களுக்கே உரியது என்றும் அவர் கூறினார்.
விசாரணையின் போது, மத நடைமுறைகளில் மூடநம்பிக்கை என்ன என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதை மேத்தா மறுத்து பல்வேறு உதாரணங்களை முன்வைத்ததால், அமர்வுக்கும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது; நீண்டகால சமூக நம்பிக்கைகளைப் புறக்கணிப்பது மத சுதந்திரத்தை பாதிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடர்கிறது.




