புதுடில்லி: ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி குழந்தைகள் நல டாக்டர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தம்பதி, தங்களின் மகனின் விதைப்பை குறைபாடுக்கான அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அறுவை சிகிச்சையை டாக்டர் பாலகோபால் மேற்கொண்ட நிலையில், விதையை பையில் சேர்ப்பதற்குப் பதிலாக இடது பக்க விதையை அகற்றிவிட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து 2006ல் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்ய டாக்டர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் 2013ல் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் படிவத்தில் விதையை கீழிறக்குவது அல்லது அகற்றுவது என இரு விருப்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது. மேலும், விதையை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் அதன் வீரியம் குறையக்கூடும் என மருத்துவக் குழு தெரிவித்த கருத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எந்த வகை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் டாக்டர் தான் “நீதிபதி” எனக் கூறி, டாக்டர் பாலகோபால் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.




