மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்பட்டால் அதை ஏற்க முடியாது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “எங்கள் அனுமதியின்றி முடிவு எடுத்தால் உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தன் அறிக்கையில், 2001-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் நரேந்திர மோடியும் அதேபோல் செய்ய வேண்டும் என்ற தென் மாநிலங்களின் “நியாயமான கோரிக்கைக்கு” மத்திய அரசின் பதில் என்ன என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும், ஏப்ரல் 29-க்கு பின் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை ஏன் புறக்கணித்தனர் என்றும் அவர் கேட்டார்.
அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கலந்தாலோசிக்காமல் முக்கிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரப் போக்கே என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தொகுதி மறுவரையறை விவகாரம் இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது என்றும், “தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்ற வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.




