சென்னை: பார்லிமென்டில் எம்பிக்கள் தங்கள் தொகுதி மற்றும் மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கே போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், பார்லி விவாதம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மேடையாக இல்லாமல் “வெற்றுச் சம்பிரதாய அவை” போல சுருக்கப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தனது அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேஜ அரசு பார்லிமென்டின் அடிப்படை செயல்பாடுகளையே திட்டமிட்டு சீர்குலைக்கிறது என்று அவர் கூறினார். விவாதங்கள் நடைபெறவும், பொறுப்பில் இருப்பவர்கள் பதில் அளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டிய அவையில், மக்கள் பிரச்சினைகள் பேசப்படுவதற்கே இடம் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தொகுதி மறுவரையறை” என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவை ஸ்டாலின் விமர்சித்தார். இது “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற மத்திய அரசின் சொந்த முழக்கத்துக்கே எதிரானது என்றும், இதனால் செலவு உயரும், வரிப்பணம் வீணாகும், பார்லிமென்ட் செயல்பாடுகளின் தரம் குறையும் என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களின் குரலைப் புறக்கணித்து முறையான கலந்தாலோசனை இன்றி செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், இது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் எல்லைமீறல் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார். இந்த நடவடிக்கை பாஜ ஆதிக்கம் உள்ள வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென் மாநிலங்களின் குரலை நெரிக்கும் எனவும், சித்தராமையா, பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி ஆகியோர் முன்வைத்த எச்சரிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை முழுமனதோடு ஆதரிப்பதாகவும், ஆனால் மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களை “தண்டிக்கும்” வகையில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்தாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மறுவரையறைக்கான அடிப்படை 2021 கணக்கெடுப்பா அல்லது 1971 கணக்கெடுப்பா என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஓபிசி மகளிரின் பிரதிநிதித்துவத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.