திமுக தலைமையிலான கூட்டணியில் நடந்த தொகுதி பங்கீட்டின்போது கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என விசிக முடிவு செய்ததற்கான காரணத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கியுள்ளார். இதை “ஏமாளித்தனமா, அரசியல் தெளிவா” என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் உள்ள கேவி குப்பம் தொகுதி விசிகவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், அது வெற்றி பெறக்கூடிய தொகுதி என்றாலும் தாம் அதை வேண்டாம் என்று திமுக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் அந்தத் தொகுதியில் இன்னொரு தலித் தலைவர் போட்டியிடுவார் என்பதால், இரண்டு தலித் அமைப்புகள் நேருக்கு நேர் மோதுவது நாகரிகமாக இருக்காது; அதனால் வேறு தொகுதி வழங்குமாறு கேட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் திமுக தரப்பில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன், சென்னை திரு.வி.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிடுவதை திருமாவளவன் வரவேற்றுப் பேசியதும் கூட்டணி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.
கேவி குப்பம் தொகுதியில் திமுக சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.




