புதுடில்லி: சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு “காலத்தின் கட்டாயம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வருவதில் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.
வெளியிட்ட அறிக்கையில், மகளிர் இடஒதுக்கீட்டை மேம்படுத்தும் முக்கிய மசோதாவை நிறைவேற்ற ஏப்.16 அன்று பார்லிமென்ட் கூடுகிறது என்று குறிப்பிட்டார். இது வெறும் சட்டப்பூர்வ நடவடிக்கை அல்ல; நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் என்றும், தேசத்திற்கான அவர்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் மோடி கூறினார். அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு, விளையாட்டு, இசை, கலை உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் முன்னணியில் இருப்பதையும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் கடந்த ஆண்டுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், 2029 லோக்சபா தேர்தலும், வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தல்களும் மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது அவசியம் என்றார்.
இந்த முடிவை தாமதப்படுத்துவது ஜனநாயகத்தின் வலிமையை தாமதப்படுத்துவதாகும் என்றும், இது எந்த அரசுக்கோ அல்லது கட்சிக்கோ சொந்தமானது அல்ல; ஒட்டுமொத்த தேசத்திற்கே சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.



