சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடு வீடாக பிரசாரம் மற்றும் பேரணிக்கு அனுமதி கோரிய அறப்போர் இயக்கத்துக்கு சென்னை ஆதம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

அறப்போர் இயக்கத்தின் தகவலின்படி, ஏப்.11 மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆதம்பாக்கம் போலீஸ் எல்லைக்குள் இந்த நிகழ்வை நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அதை நிராகரித்து, சட்டம்-ஒழுங்கு காரணத்தை முன்வைத்துள்ளனர்.

‘ஓட்டுக்கு பணம் அல்லது பரிசுப்பொருள் வாங்க வேண்டாம்’ என்று பிரசாரம் செய்தால் குடிசைப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்யக்கூடும்; அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் பேரணிக்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தல் விதிகளுக்குள் 5 பேர் மட்டும் பங்கேற்று, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல பகுதிகளில் இதே பிரசாரம் நடத்தி வருவதாகவும், இதுவரை எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. குடிசைப்பகுதி மக்களை குறிப்பிட்டு இவ்வாறு கூறுவது அவதூறாக இருப்பதாகவும், பேரணிக்கு தடை விதித்த முடிவை கேள்விக்குள்ளாக்கியுள்ள இயக்கம், தங்களின் விழிப்புணர்வு பிரசாரம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.