மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்று பாஜ தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்துள்ளது. கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜவின் “சங்கல்ப பத்திரம்” தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில எல்லை வழியாக பசு மாடு கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் அனைத்துப் பணிகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜ தெரிவித்தது. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்; போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.15,000 உதவி வழங்கப்படும்; ஊழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் எனவும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மாநிலத்தின் கலாசார பாரம்பரியத்தைப் பரப்ப அருங்காட்சியகம் அமைக்கப்படும்; ரவீந்திரநாத் தாகூர் பெயரில் கலாசார மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு பேசிய அமித்ஷா, மேற்குவங்கத்தின் “இருண்ட காலத்தை” நீக்கி வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதே இலக்கு என்றார். மக்கள் அச்சத்திலும் விரக்தியிலும் இருப்பதாகவும், மாற்றத்தை விரும்புவதாகவும் கூறிய அவர், முதல்வர் மம்தா பானர்ஜியை “பொய்யான வாக்குறுதிகள்” மற்றும் ஊடுருவல்காரர்களுடனான தொடர்பு என்ற குற்றச்சாட்டுகளுடன் விமர்சித்தார்.




