ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கை, யூனியன் பிரதேசத்தில் இயற்கை ஏரிகள் வேகமாக குறைந்து வருவது குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளது. 2024–25 மற்றும் 2025–26 நிதியாண்டுகளுக்கான பல துறைகளின் செயல்திறன் அறிக்கைகளில் சுற்றுச்சூழல் தொடர்பான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையின் படி, ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் ஒருகாலத்தில் 697 இயற்கையாக உருவான ஏரிகள் இருந்தன. இதில் 315 ஏரிகள் முற்றிலும் காணாமல் போயுள்ளன; மேலும் 203 ஏரிகளின் பரப்பளவு குறைந்துள்ளது. 1967 முதல் 2024 வரை 57 ஆண்டுகளில், மொத்த ஏரிகளில் 74%க்கும் அதிகமானவை மறைந்தோ அல்லது சுருங்கியோ உள்ளன என சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது.
315 ஏரிகள் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்ததாகவும், சுருங்கிய 203 ஏரிகள் மொத்தமாக சுமார் 3,200 ஏக்கர் அளவுக்கு பரப்பளவை இழந்துள்ளதாகவும் அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இதனால் தாவர-விலங்கு வளம், நீர்வளம், உணவு உற்பத்தி மற்றும் உயிரியல் சமநிலைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுவதோடு, குடிநீர் பஞ்சம் உருவாகி மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள ஏரிகள் இயற்கை வெள்ளத் தடுப்புகளாக செயல்பட்டு மழைக்காலங்களில் அதிக நீரை தாங்கி பகுதிகளை பாதுகாக்கும் என்றும், ஏரிகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்ததால் 2014-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கம் அதிகரித்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ஏரிகள் பாதுகாப்புக்கு தனியான சட்ட அமைப்போ அல்லது மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்போ இல்லாததே முக்கிய நிர்வாக குறைபாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறை, வருவாய், வேளாண்மை, நகர வளர்ச்சி, சுற்றுலா என ஐந்து துறைகளுக்கு பொறுப்புகள் சிதறி இருப்பதாகவும், 1989-லேயே விரிவான ஆய்வு உத்தரவு இருந்தும் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பற்றாக்குறையால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தால், வுலார் உள்ளிட்ட ஆறு பிரபல ஏரிகளுக்கு மட்டுமே பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஏரிகளுக்கு திட்டங்கள் இல்லாதது கவலைக்குரியது; மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மேம்படுத்தப்படாதது, கண்காணிப்பு குறைபாடு மற்றும் ஒருங்கிணைந்த நகரத் திட்டமின்மை ஆகியவை சீரழிவின் முக்கிய காரணங்களாகவும் சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது.




