கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணியின் தரம் குறித்து அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கலெக்டர் பங்களா முகவரியில், 2023 முதல் 2025 வரை கோவையில் பணியாற்றிய முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பங்களாவுக்கு பின்புறம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. அங்கு வசித்தவர்கள் கவுண்டம்பாளையம் குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த நிலையில், அவர்களது வாக்குகள் கவுண்டம்பாளையம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் முன்னாள் கலெக்டர் மாறுதலாகி சென்றும் ஓராண்டாகி விட்ட நிலையில், அவரது பெயர் கோவை தெற்கு பட்டியலில் தொடர்வது கவனம் ஈர்த்துள்ளது. அவர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றிய பின்னர், தற்போது முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் வீட்டு முகவரியிலேயே முன்னாள் கலெக்டர் பெயர் இருப்பது கூட கவனிக்கப்படாமல் எஸ்.ஐ.ஆர். வேலை நடந்தது எப்படி என அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.