வரும் ஏப்.23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அவர்களை சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து இந்த முடிவை அறிவித்தனர். இந்த சந்திப்பில் தமிழக உருது முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட எட்டு முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, தமிழக அரசின் தலைமை காஜி நியமனம் தொடர்பாக திமுக அரசின் நடவடிக்கையில் ஏற்பட்ட அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக, சூபி அல்லாத சன்னி முஸ்லிம் பிரிவில் இருந்து ஒருவரை தலைமை காஜியாக நியமித்ததற்கு எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 3% என்றும், அதில் சுமார் 2.3% அளவில் சூபி சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளதாகவும் அமைப்புகள் குறிப்பிட்டன. தேர்தல் நெருங்கும் சூழலில், எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்கதாக கூறப்படும் ஒரு பிரிவின் ஆதரவு அதிமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.