புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்ட அச்சுத் தடை குறித்து, 51 கல்வியாளர்கள் கொண்ட குழு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது கல்விச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. இணைப்புப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி. வடிவமைக்கிறது. சர்ச்சைக்கு காரணமானது “நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம்; அதில் நீதித்துறையில் ஊழல் இருப்பதாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, என்.சி.இ.ஆர்.டி.-க்கு கண்டனம் தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்தை அச்சிடத் தடை விதித்தது. மேலும், அந்தப் பாடத்தை தயாரித்த மூன்று கல்வியாளர்களை எந்தவொரு கல்வித்திட்டங்களிலும் சேர்க்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதத்தில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்வி மற்றும் பாடத்திட்டம் தொடர்பான முடிவுகளை கல்வியாளர்களே எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத் தலையீடு கல்விச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் உச்ச நீதிமன்றத்திடம் தடை நீக்க கோர வேண்டும்; சர்ச்சைக்குரிய அத்தியாயத்தை மட்டும் நீக்கி, மீதமுள்ள பாடங்களை உடனடியாக ஆன்லைனில் வெளியிட அனுமதிக்க வேண்டும்; மேலும் பாதிக்கப்பட்ட மூன்று கல்வியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.