இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான், முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்பட்ட ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான தயாரிப்புகளில் இது முக்கியமான படி என அவர் குறிப்பிட்டார்.
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறுகையில், ஏர்டிராப் சோதனை வெற்றி திட்டத்தின் தயார்நிலையை உறுதிப்படுத்தும் என்றனர். விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் போது விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கமாகும்.



