கோவையில் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருடன் நடந்த கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், 2014ல் மின் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளைச் சார்ந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

அன்றைய தினம் டில்லியின் பல பகுதிகளிலும் வட மாநிலங்களிலும் கடுமையான மின் துண்டிப்பு ஏற்பட்டதாகவும், நாள் முழுவதும் பணிச்சுமையால் இரவில் உறங்கச் சென்றபோது, “மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கும்போது நீங்கள் எப்படி தூங்க முடியும்?” என்று மனைவி கேள்வி எழுப்பி, மின் விநியோகம் சீரமைக்கும் பணியை நேரில் சென்று பார்க்கச் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அனுபவம் பிரச்னைகளுக்கு முன்வந்து தீர்வு காணும் அணுகுமுறையை காட்டுவதாகக் கூறிய அவர், முன்கூட்டியே திட்டமிடுதல் மற்றும் புதுமையான தீர்வுகள் என்பதே தங்களின் செயல்முறை என விளக்கினார். வட மாநில மின் விநியோக கிரிட் செயலிழந்திருந்த காலத்தில், தனித்தனியாக இருந்த கிரிட்களை ஒன்றிணைக்க பிரதமர் மோடி தீர்வு கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் மூன்றரை ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவில் ஒரே கிரிட் ஆக இணைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், இதனால் நாட்டின் மின் விநியோக கட்டமைப்பு வலுப்பெற்று பல மாநிலங்களில் மின் துண்டிப்பு குறைந்து 24 மணி நேர மின் விநியோகம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், கோவையை தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மையமாக பிரதமர் மோடி குறிப்பிடுவதாகச் சொல்லி, நகரின் வேகமான வளர்ச்சியையும், பெருமளவு சிறு-குறு நிறுவனங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கொள்கை முடிவுகளுக்கான ஆலோசனைகளில் தொழில்துறையினரின் கருத்துகளை அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.