சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான சீட் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், போட்டியிட வாய்ப்பு வழங்காமல் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறி, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் மகளிர் பிரிவின் தேசிய செயலாளராகவும் இருந்த ஹசீனா சையத், 2024-ல் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர். தேர்தலில் தன்னுக்கும் பெண்களுக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை விமர்சித்தும் பேசியுள்ளார். மேலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்சியின் நிலைப்பாடு நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.

தனக்கு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் சீட் கடைசி நேரத்தில் பறிக்கப்பட்டதாகவும், சிங்காநல்லூர், குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட மகளிர் நிர்வாகிகளின் பெயர்கள் கூட பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒப்பீடு செய்தார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஹசீனா சையத்தை பதவியில் இருந்து நீக்கியதாக மகளிர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஹசீனா சையத் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி ராஜினாமாவை சமர்ப்பித்து, தன்னை உட்பட தகுதி வாய்ந்த பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.