மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்ட போது, காங்கிரஸ் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் பவுஜியா ஷேக் அலீம் மற்றும் ருபினா இக்பால் பங்கேற்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்த இந்த கூட்டத்தில், பா.ஜ. கவுன்சிலர்கள் இதை “தேசிய உணர்வுக்கு அவமதிப்பு” எனக் கூறி முழக்கமிட்டனர். இதனால் கூட்டத்தொடரில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குழப்பம் நீடித்த நிலையில், மாநகராட்சி தலைவர் இருவரையும் கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளியேறினர்.

செய்தியாளர்களிடம் ருபினா இக்பால், தாங்கள் எந்த மிரட்டலுக்கும் பணியமாட்டோம் என்றும், தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையில் ‘வந்தே மாதரம்’ பாடுவது தடை எனவும் கூறினார். மேலும், பாடலின் சொற்களுக்கு தாம் அளிக்கும் பொருளை விளக்கி, அல்லாவை மட்டுமே வழிபடுவதாக தெரிவித்தார்.

அலீம், அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய கீதத்தை மதிப்பதாகவும், ஆனால் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா, இது பா.ஜ. உடன் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட “நாடகம்” என குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.