மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஹால்டியாவில் நடைபெற்ற பெரிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில மக்களுக்கு ஆறு “உத்தரவாதங்களை” அறிவித்தார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பின்னணியில் பேசிய அவர், பா.ஜ.க. அரசு அமைந்தால் மாநிலத்தில் நிலவும் மோசமான நிலை மாற்றப்பட்டு, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலைநாட்டப்பட்டு மக்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்படும் என கூறினார்.

மேலும், மக்களுக்கு சேவை செய்யும் வகையில் அரசு இயந்திரங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார். அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உடையவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் முதல் கடை நிலை ஊழியர் வரை யார் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்; அந்த ஆட்சிக்கால ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மாநிலத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்; அரசியல் சாசனத்தின் படி அகதிகளுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மாநில அரசு ஊழியர்களுக்காக 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என கூறிய அவர், ஊழலால் மாநிலத்தை சுரண்டியவர்களை ஒருவரையும் விடாமல் நீதியின் முன் நிறுத்துவோம் என்ற கூடுதல் உத்தரவாதத்தையும் அளித்தார்.