பாட்னா: பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள (ஜே.டி.யு) தலைவருமான நிதிஷ் குமார், வரும் ஏப்.14 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜே.டி.யு–பா.ஜ. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் ஜே.டி.யுவை விட பா.ஜ. அதிக இடங்களை பெற்றிருந்தாலும், முதல்வராக நிதிஷ் குமாரே பதவியேற்றார்.
இதற்கிடையில், மாநிலத்தில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமையலாம் என்ற பேச்சுகள் வலுப்பெற்ற நிலையில், சமீபத்திய ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினரிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தான் எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா எம்.பி. உள்ளிட்ட பல பதவிகளில் இருந்தாலும், ராஜ்யசபாவில் இதுவரை பணியாற்றவில்லை என்பதாலேயே டில்லி அரசியலுக்கு செல்ல முடிவு செய்ததாக நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சூழலில், அவர் இன்று ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்; இதற்காக நேற்று பாட்னாவிலிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முதல்வர் பதவியை உடனடியாக நிரப்புமாறு பா.ஜ. மேலிடத்திடம் அவர் வலியுறுத்தியதாக தகவல். தற்போதைய துணை முதல்வரும் பா.ஜ. மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்க அவர் விரும்புவதாகவும், ஏப்.15 அன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், நிதிஷ் குமாரின் 20 ஆண்டுகளுக்கு மேலான மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.




