பாட்னா: பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள (ஜே.டி.(யு)) தலைவருமான நிதிஷ் குமார், வியாழக்கிழமை (ஏப்.10) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார்.

அவருக்கு துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜே.டி.(யு)–பா.ஜ. அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் ஜே.டி.(யு)வை விட பா.ஜ. அதிக இடங்களை கைப்பற்றினாலும், முதல்வராக நிதிஷ் குமாரே தொடர்ந்தார்.

இதற்கிடையில், பீஹாரில் விரைவில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமையலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், சமீபத்திய ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டார். எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா எம்.பி. ஆகிய பதவிகளை வகித்திருந்தாலும், ராஜ்யசபா உறுப்பினராக இதுவரை இருந்ததில்லை; அதனால் டெல்லி அரசியலை நோக்கி செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய பதவியேற்புடன், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏப்.14 அன்று முறைப்படி ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில், முதல்வர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என பா.ஜ. தரப்பு வலியுறுத்தி வருவதாகவும், துணை முதல்வரும் மூத்த பா.ஜ. தலைவருமான சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்க பா.ஜ. தலைமை விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.