சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து ஓட்டு சேகரித்தார்.

பயணத்தின் போது அவர் பயணிகளுடன் உரையாடி, அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். மேலும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சில பயணிகள் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் அவர் பயணிகளுடன் கலந்துரையாடினார்.

சமீப நாட்களில் நடைபயிற்சியின் போது மக்களை சந்திப்பதும், சாலையோர டீக்கடைகளில் பொதுமக்களுடன் அமர்ந்து பேசுவதுமாக அவர் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.