சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோட், தி.மு.க. செல்வாக்கு கொண்டதாக கூறப்படும் சில போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை ‘காத்திருப்போர் பட்டியலில்’ வைக்க முடிவு செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில உயரதிகாரிகள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தொடர்பாக பல நிலை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தியதாகவும், ரகசிய உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி முக்கிய பதவிகளை தக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த விவகாரம் குறித்து புதிய டிஜிபிக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சில உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னரும், தங்களின் அதிகார வரம்பை மீறி மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவுகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற தலையீடுகளுக்கு புதிய டிஜிபி தடை விதித்துள்ளதாகவும், இத்தகைய அதிகாரிகள் வழங்கும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என மண்டல ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பு என கருதப்படும் அதிகாரிகளை களையெடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக, தி.மு.க. ஆதரவு கொண்ட உயரதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் தயாரித்து, இரண்டு நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப திட்டமுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.