தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ஐ.சி.சி.சி.) தற்போது எந்த நிலையில் உள்ளன, அவை மூலம் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கான தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

நாடு முழுவதும் 100 நகரங்களை மேம்படுத்தும் நோக்கில் 2015-ல் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. நகர சேவைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஒவ்வொரு நகரத்திலும் ஐ.சி.சி.சி. மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த மையங்கள் துாய்மை பணிகள், குடிநீர் மற்றும் வடிகால் அமைப்புகள், போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. இதற்காக 2021-ல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை நிதி வழங்கியது.

முதற்கட்டமாக ரூ.107 கோடி செலவில், 2021 ஆகஸ்டில் சென்னை, வேலூர், திருப்பூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் மையங்கள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், இந்த மையங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேரிடர் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் மையங்கள் செயல்படுவதில்லை என்ற தகவல்களின் பின்னணியில், ஐ.சி.சி.சி. மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் தற்போதைய செயல்பாட்டு நிலவரம் குறித்து விவரங்களை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.