காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெறும் கூட்டத்தில் விஜய் பேசுகிறார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் 20 டாக்டர்கள், ‘வாக்கி டாக்கி’யுடன் 200 தன்னார்வலர்கள் பணியில் இருக்க வேண்டும், இலவச பொருட்கள் வழங்கக் கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது உள்ளிட்ட 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரசாரம் நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் மரங்களில் ஏறுவதைத் தடுக்கும் வகையில் மரங்களைச் சுற்றி தகர ஷீட் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள டிரான்ஸ்பார்மரைச் சுற்றியும் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.