தவெக தலைவர் விஜய் மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி பிரசாரத்திற்காக சென்றபோது, தேர்தல் பறக்கும் படையினர் அவரது பிரசார வாகனத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று பிரசாரம் செய்யும் திட்டத்தில், விஜய் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரையிலிருந்து பிரசார வாகனத்தில் காரைக்குடி நோக்கி புறப்பட்டார்.

இந்த பயணத்தின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாகனத்தை இடைமறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனையில் எதுவும் சிக்காததால் வாகனத்தை தொடர்ந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.