நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என உலக வங்கி தனது கணிப்பை சற்றே உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரியில் வெளியிட்ட புதுப்பிப்பில் இது 6.5% என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையில், ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக ஆண்டின் முதல் சில மாதங்களில் நுகர்வோர் தேவை வலுவாக நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்காசிய போர் ஏற்படுத்தும் தாக்கங்கள் வளர்ச்சி முன்னறிவிப்பை பாதிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் வலுவான உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி மேம்பாடு காரணமாக இந்திய வளர்ச்சி 7.6% ஆக இருந்திருக்கலாம் என உலக வங்கி கணித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் வெளிப்புற அபாயங்கள் காரணமாக வளர்ச்சி 6.6% ஆக மந்தமாகும் என தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு விலைவாசியை தூண்டி, குடும்பங்களின் செலவுத்திறனை குறைக்கக்கூடும் என அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்கு மானியம் வழங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அரசின் நுகர்வு செலவு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகரிக்கும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக முதலீட்டு வளர்ச்சியும் சற்றே மந்தமாகலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.




