பண மூட்டைகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அரசு பங்களாவில் வசித்த அவர் வீட்டில் கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு பணியின் போது வீட்டின் ஒரு அறையில் எரிந்த நிலையில் ₹500 நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர். அதை ஏற்ற சபாநாயகர் விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டார்.
பார்லிமென்ட் குழு விசாரணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த விசாரணை தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. பார்லி விசாரணை நடந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.




