நடிகர்-அரசியல்வாதி விஜயின் பிரசார கூட்டங்களுக்கு ரசிகர்கள் கூட்டமாக வருவது இயல்பானது; ஆனால் அது ஓட்டாக மாறும் என்பது வேறு விஷயம் என மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், நிருபர்களிடம் அவர் இதை கூறினார். “நாங்களும் விஜய் ரசிகர்கள் தான்” என குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவில் மக்கள் தங்கள் விருப்பமான கட்சி/கூட்டணிக்கே ஓட்டு போடுவார்கள் என்றார்.

திருச்செந்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளரின் டிபாசிட் பறிபோகும் எனவும் அவர் கூறினார். மேலும், விஜய் “பா.ஜ. அனுப்பிய வேட்பாளர் மாதிரி” இருப்பதாகவும், சிறுபான்மை மக்களின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டார்கள்; மதச்சார்பற்ற கூட்டணிக்கே ஒட்டுமொத்தமாக ஓட்டு போடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் விழாது என கூறிய அமைச்சர், அவர் அந்த சமுதாயத்தை “காலை வாரி விட்டார்” என விமர்சித்தார். மேலும், மத்தியில் பா.ஜ. ஆட்சியில் இருப்பதால் சினிமாவும் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், “ஜனநாயகன்” படத்தை வெளியிட முடியாத விஷயத்தை பேசாமல் தி.மு.க.வை விஜய் தாக்குவதாகவும் தெரிவித்தார்.