‘ஜனநாயகன்’ திரைப்படம் சமூக வலைதளங்களில் கசிய்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில், பாஜவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இது மிகப் பெரிய தவறு எனக் கூறினார். சில நிமிடங்களே கசிய்ந்ததா அல்லது முழுப் படமா என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போஸ்ட்-புரொடக்ஷன் ஸ்டுடியோக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்கள் யாரும் லீக் வீடியோவை பார்க்கவோ பகிரவோ கூடாது என்று கேட்டுக்கொண்டார். இது பலரின் உழைப்பு, வியர்வை மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் முதலீடு என்பதால், அப்படியான வீடியோ வந்தாலும் ‘ஸ்கிப்’ செய்து நீக்கிவிட வேண்டும் என்றார்.
தேர்தலுக்குப் பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியானால் ரசிகனாக தியேட்டருக்குச் சென்று பார்ப்பேன் என்றும், சினிமாவையும் அரசியலையும் கலக்கக் கூடாது என்றும் அண்ணாமலை கூறினார். இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் பாஜவையும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரையும் இழுப்பது அரசியல் அநாகரிகம் என விமர்சித்த அவர், தவறு செய்தவர்கள் மீது போலீசில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




